×

அன்னமங்கலம் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பெரம்பலூர்,மார்ச் 30: அன்னமங்கலம் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் பிரபாகரன் உறுதியளித்தார். பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டியிடுகிறார். இதனையொட்டி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறனர். இதன் ஒரு கட்டமாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு திரளான பெண்கள் ஆரத்தியெடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தின் பெரிய ஊராட்சி அன்னமங்கலம் ஊராட்சியாகும். இவ்வூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசுவக்குடி அணையிலிருந்து அன்னமங்கலம் ஏரிக்கு பாசன வாய்க்கால் அமைக்கும் பணியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக நிறைவேற்றுவேன்.  இதேபோல் அன்னமங்கலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். அன்னமங்கலம் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் பிரபாகரன் உறுதியளித்து வாக்குச் சேகரித்தார்.

பின்னர் அரசலூர், முகமதுபட்டணம், தொண்டமாந்துறை, மலையாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், மதிமுக மாவட்டப் பொருளாளர் ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Annamangalam ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...